ஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்! - மாணவநண்பன்

கற்போம்.. கற்பிப்போம்..

Hot Posts

Post Top Ad

Wednesday 4 April 2018

ஆன்ட்ராய்டு போனும் அழகிய தேவதையும்!

ர் அடர்ந்த காடு... ஒத்தையடி பாதை... நான் மட்டும் தனியா நடந்து போய்ட்டிருந்தேன். 

அடர்ந்த காட்டுக்குள்ளே சின்னப் பொண்ணான நீ மட்டும் எப்படித் தனியா போய்ட்டிருந்தேனு லாஜிக்கா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. என்னையும் கதையையும் மட்டுமே ஃபாலோ பண்ணணும் ஓகே... 

என் கையில் ஒரேயொரு போன். டச் போன்தான்... ஆனா, கொஞ்சம் பழசு. முதல்ல அப்பா யூஸ் பண்ணி, அப்புறம் அண்ணா யூஸ் பண்ணி... இப்போ, என் போன் ஆகியிருக்கு. இதுவரைக்கும் 67 இடங்களில் நின்னு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அப்படியே நடந்து போய்ட்டே இருக்கும்போது, அந்தப் பாதை ஒரு பெரிய்ய்ய்ய்ய ஏரியில் போய் முடிஞ்சது.
முகத்தைக் கழுவிக்கிட்டு இன்னும் செல்ஃபிகளை எடுப்போம்னு ஃபிரஷா குனிஞ்சு தண்ணியைக் கையில் அள்ளினேன். ஐயோ... தோளில் மாட்டியிருந்த குட்டி ஹேண்ட்பேக் தண்ணியில் விழுந்து, ‘குபுக்’னு முங்கிடுச்சு. போச்சு... போச்சு... அதுலதான் என் செல்போன் இருக்கு. ‘எடுத்த செல்ஃபிக்கள் எல்லாமே போச்சே... போச்சே’னு அழ ஆரம்பிச்சுட்டேன். 

திடீர்னு ஒரு பிரகாசமான ஒளி. ‘கண்ணெல்லாம் கூசுது. யாருடா கண்ணுக்குள்ள பகல்ல டார்ச்லைட் அடிக்கிறது’னு நிமிர்ந்து பார்த்தா... அட நம்ம வனதேவதை. அதாம்ப்பா... மரம்வெட்டி, கோடரி கதையில் வருமே அதே தேவதைதான்.
‘அடடா... போன் இருந்திருந்தா இந்நேரம் தேவதையோடு ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாமே’னு நினைச்சுக்கிட்டேன். 

தேவதை என்னைப் பார்த்து, ‘ஏன் பாப்பா அழறே?னு கேட்டாங்க. 

`நான் ஒண்ணும் பாப்பா இல்லே... ஏழாம் கிளாஸ் படிக்கிறேன்’னு சொன்னேன்.

அதுக்குத் தேவதை சிரிச்சுக்கிட்டே, `உன் பாட்டியே எனக்குப் பாப்பாதான்’னு சொன்னாங்க.
‘அட... ஆமாம். ரொம்ப ரொம்ப வருஷமா இந்தத் தேவதை இருக்காங்களே’னு நினைச்சுக்கிட்டு, என் செல்போன் பையோட ஏரியில் விழுந்துட்டதைச் சொன்னேன்.

அதுக்கு தேவதை, `நீ அழதே... நான் எடுத்துக் கொடுக்கிறேன்’’னு சொல்லிட்டு, தண்ணிக்குள்ளே ஒரு முங்கு முங்கி மேலே வந்தாங்க. `இதுவா உன் போன்?’னு கேட்டாங்க. அவங்க கையில் ஆப்பிள் ஐ போன் எக்ஸ் இருந்துச்சு.

எனக்குச் செம குஷியாகிடுச்சு. ஆசையா இருந்தாலும், ‘இது அடுத்தவங்க பொருளாச்சே’னு கனத்த மனசோடு, ‘இது என்னோடது இல்லே’னு சொன்னேன்.
தேவதை மறுபடியும் தண்ணியில் மூழ்கி எழுந்துவந்து, `இதுவா உன் போன்?’னு கேட்டாங்க. இப்போ அவங்க கையில், -------- (கோடிட்ட இடத்தில் உங்களுக்குப் பிடிச்ச போன் பெயரை எழுதிக்கோகங்க). 

‘சரிதான். இங்கே வர்றவங்க எல்லாம், என்னை மாதிரியே ஏரியில் முகத்தைக் கழுவும்போது போனைத் தண்ணிக்குள்ள போட்டுருவாங்க போலிருக்கு’னு நினைச்சுக்கிட்டு, `இதுவும் என்னோடது இல்லே’னு சொன்னேன். 

தேவதை, மறுபடி ஒரு முங்கு போட்டு மேல வந்தப்போ, என் பழைய மொபைல் கையில் இருந்துச்சு. அதே பழைய கேள்வியைக் கேட்டாங்க.
நான், ‘ஆமாம்... இதுதான் என் போன்’னு சொன்னேன்.
தேவதை உடனே, ‘உன் நேர்மையை அப்ரிஷியேட் பண்றேன். இந்தா மூணு மொபைலையும் நீயே வெச்சுக்க’னு சொன்னாங்க.
எனக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். ஆசையோடு கையை நீட்டும்போது... 

என் சைனா செட் போனிலிருந்து அலாரம் அடிச்சுது... அடிச்சுப்பிடிச்சு எழுந்தேன். ‘சே... எல்லாம் கனவா?’னு நினைச்சுக்கிட்டு, முகத்தைக் கழுவிட்டு வந்து படிக்க ஆரம்பிச்சேன்.

No comments:

Post a Comment

Post Top Ad