Saturday 17 March 2018

ஒரு ஆசிரியர் என்பவர் யார்?

சென்னையில் உள்ள  பெருங்குடியில், 12 வயதே நிரம்பிய ஒரு  சிறுமிக்கு, தலைமையாசிரியரான பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தார்' என்ற செய்தி, நாளிதழில் வெளியானது; அதை படிக்கும் போது, நெஞ்சு பதறியது.

அதே போல நெல்லை மாவட்டம், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்புத் தலைவனை, அதே வகுப்பில் பயிலும் மாணவன், தன் மீது புகார் செய்தான் என்பதற்காக, அவனை, சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இது, மிகவும் கொடூரமான செயல்.

இது மாதிரியான செய்திகள் வெளியாகும் இந்நிலையில், '12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் தொந்தரவு செய்தால், காமக் கொடூரனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்படும்' என, ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது, வரவேற்கத்தக்கது.

நாட்டின் எதிர்காலம், வகுப்பறையின், நான்கு சுவர்களுக்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நல்ல ஆட்சியரால் தான், நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்.மாதா, பிதா, குரு, தெய்வம் என, தெய்வத்திற்கு முன், ஆசிரியரை வைத்துள்ளோம்.

பெற்றோர் ஒரு குழந்தையை, உலகிற்கு தருகின்றனர். ஆனால், மாணவருக்கு உலகத்தையே தருகிறார் ஆசிரியர். தன் குடும்பத்தில் ஒருவராக, மாணவனை கருதும் ஆசிரியரால் தான், அந்த மாணவருக்கு தேவையான கல்வியை, சரியான முறையில் வழங்க முடியும். இன்றைய திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், வலைதளங்களால், மாணவர்கள் அழிவுப் பாதையில் பயணிக்கின்றனர்.

இக்கால கட்டத்தில், மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி முறையில், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து போதிக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்போர், சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான, இடைவெளியை குறைப்போராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் துாங்கினால், நாடே துாங்கும்' என்றார், முன்னால் முதல்வர் அண்ணாதுரை.

ஆசிரியர்களே...

மாணவர்களின் தனித் திறனை கண்டு, ஊக்கப்படுத்தி, நம்பிக்கையை விதைத்து, முன்னேற உதவுங்கள்... நாட்டையும் முன்னேற்றுங்கள்...

1 comment:

  1. கல்வி மறந்து கலவிக்கு ஆசை படுறாங்க போல சில ஆசிரியர்கள்...!

    ReplyDelete